மாட்டிறைச்சி சாப்பிட்ட நேரு பண்டிதரே அல்ல: ராஜஸ்தான் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு


மாட்டிறைச்சி  சாப்பிட்ட நேரு பண்டிதரே அல்ல: ராஜஸ்தான் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2018 11:57 AM GMT (Updated: 11 Aug 2018 11:57 AM GMT)

மாட்டிறைச்சி மற்றும் பன்றியின் இறைச்சியை உண்பவர்களை எப்படி பண்டித் என்று அழைக்க இயலும் என எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹூஜா சர்ச்சை கருத்து கூறியுள்ளார். #GyanDevAhuja

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹூஜா பல்வேறு சர்ச்சைக்கருத்துகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர் ஆவார். பாஜக கட்சியைச் சேர்ந்த ஞான் தேவ் அஹூஜா சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”நாட்டில் நிலவும் அனைத்து சமூகத்தீமைகளுக்கும் நேரு-காந்தி குடும்பங்களே காரணம். மேலும் பண்டித் ஜவஹர்லால் நேரு என்று நேருவை அழைப்பதே தவறாகும். மாட்டிறைச்சி மற்றும் பன்றியின் இறைச்சியை உண்பவர்களை எப்படி பண்டித் என்று அழைக்க இயலும். காங்கிரஸே நேரு பெயருக்கு முன்னர் பண்டித் என முன்மொழிந்தது” எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சச்சின் பைலட், ராகுல் காந்தி அவரது பாட்டி இந்திரா காந்தியுடனேயே கோவில்களுக்கு செல்ல கற்றுக்கொண்டார் எனக் கூறினார். இது முற்றிலும் தவறான கூற்றாகும். காந்தி சந்ததிகள் எவருமே இந்திரா காந்தியுடன் கோவில்களுக்கு சென்றது இல்லை. நான் கூறுவதில் தவறு என காங்கிரஸார் நிரூபித்தால் நான் என் பதவியை விட்டு விலகுகிறேன். நிரூபிக்கப்படவில்லை என்றால் சச்சின் பைலட் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாஜக சார்பில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் கவுரவ் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை ஜெய்ப்பூரில் இருந்து இன்று தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story