கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்


கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:20 AM GMT (Updated: 14 Aug 2018 4:20 AM GMT)

கேரளாவின் வயநாடு மாவட்டத்திலுள்ள பானசுரா அணையின் மதகுகள் அதிகாலை 3 மணிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டதால், கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். #KeralaFloods

வயநாடு,

கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.

வடமேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று புதிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையில் இருந்து நேற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் துணை அணையான செருதோனி அணையில் 5 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இருக்கும் பல அணைகள் பலத்த மழையால் நிரம்பி வழிகிறது. வயநாடு மாவட்டத்திலுள்ள பானசுரா அணையும் முழு கொள்ளளவை எட்டியது. 

இந்நிலையில் , எந்த வித வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பும் இல்லாமல் அதிகாலை 3 மணிக்கு பானசுரா அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் பனமரம் பகுதியில் வசிக்கும் மக்கள், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அலறியடித்து கொண்டு ஓடினர். இந்நிலையில் பனமரம் பகுதியில் வெள்ள அளவு குறைந்தாலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

Next Story