வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி


வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி
x
தினத்தந்தி 16 Aug 2018 1:42 AM GMT (Updated: 16 Aug 2018 1:42 AM GMT)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.சமீபத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

கடந்த சில நாட்களாக வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த துணை ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். 


Next Story