வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பிரபல சாமியார் மீது பெண் புகார்


வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பிரபல சாமியார் மீது பெண் புகார்
x
தினத்தந்தி 11 Sep 2018 6:42 AM GMT (Updated: 11 Sep 2018 6:42 AM GMT)

மைசூரைச் சேர்ந்த ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு

கர்நாடக மாநிலம் மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி  தங்கியுள்ளார். சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக இங்கு தங்கியுள்ளார். செப்டம்பர் 24ம் தேதி இந்த விரதம் முடிவடைகிறது. இந்த நிலையில்தான் இச்சாமியார் மீது பலாத்கார புகார் கிளமபியுள்ளது. இவர் மீது புகார் கொடுத்த பெண் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.

அவர் தனது புகாரில், எனக்கும் எனது கணவருக்கும் இடையே திருமணமாகி 15 வருடமாகிறது. எனது கணவர் இந்த சாமியாரின் பக்தர் ஆவார். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை சாமி தீர்த்து வைப்பார். நீ போய்ப் பார் என்று கூறி வந்தார். ஆனால் நான் பார்க்க போக மாட்டேன் என்று கூறி விட்டேன். இந்த நிலையில் செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 1 மணி வேளையில் காலிங் பெல் ஒலித்தது. வெளியே சென்றிருந்த கணவர்தான் வந்து விட்டாரோ என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்தார். 

அவருடன் ஐந்து பேரும், கூடவே எனது கணவரும் நின்றிருந்தனர். சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னைத் தள்ளி விட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது அந்தரங்க உறுப்பிலும் அவர் பலமாக தாக்கினார். அசிங்கமாக பேசினார், திட்டினார். கோவிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.

பிறகு என்னை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். என்னைக் கொல்லவும் முயற்சித்தார். பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர் ஒரு வாகனத்தில் என்னைக் கட்டாயப்படுத்தி ஏற்றினார். அவரும் ஏறிக் கொண்டார். என்னை அவரது கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறினார். இந்த வழக்கில் பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மைசூரை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

Next Story