ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை - முதல்மந்திரி குமாரசாமி எச்சரிக்கை


ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை - முதல்மந்திரி குமாரசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2018 10:30 PM GMT (Updated: 14 Sep 2018 8:40 PM GMT)

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி, ஆட்சியமைத்து இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.

மாநில அரசில் மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறாது என குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

மாநிலத்தில் எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள்? என்பது பற்றி எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன்.

இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. அதை பாதுகாத்துக்கொள்ள எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். அனைத்து மந்திரிகளும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த மந்திரியும் எனக்கு எதிராக செயல்படவில்லை.

பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள். இப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது, ஆட்சி கவிழவில்லை.

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று செய்திகள் வெளியாவதால், அதிகாரிகள் மத்தியில் ஒருவித குழப்பம் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் விதமாக அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன்.

தென்னிந்திய முதல்-மந்திரிகள் மாநாடு 18-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்னிந்திய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள்.

மகதாயி நதிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன். மகதாயி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டுவேன். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story