விபத்தில் இறந்த தனது மகன் நினைவாக சாலைகளிலுள்ள பள்ளங்களை அடைக்கும் தந்தை


விபத்தில் இறந்த தனது மகன் நினைவாக சாலைகளிலுள்ள பள்ளங்களை அடைக்கும் தந்தை
x
தினத்தந்தி 15 Sep 2018 4:32 AM GMT (Updated: 15 Sep 2018 4:32 AM GMT)

மும்பையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த தனது மகன் நினைவாக சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை அவரது தந்தை அடைத்து வருகிறார்.

மும்பை, 

மும்பையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த தனது மகன் நினைவாக தந்தை நகரின் சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை மணல் மற்றும் சரளைக்கற்கள் கலவை கொண்டு அடைத்து வருகிறார். தனது மகன் போல் யாரும் விபத்தில் சிக்கி உயிரிழக்ககூடாது என அவரது தந்தை செய்து வரும் இச்செயல் காண்போரை மனம் நெகிழ வைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த தாதராவ் பில்ஹோரே என்பவரின் மகன் ப்ரகாஷ் பில்ஹோரே (16). கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது உறவினருடன் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது மழைக்காலம் என்பதால் நகரின் பல இடங்களிலுள்ள சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே பைக்கில் சென்ற இருவரும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் ப்ரகாஷ் பில்ஹோரே தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த உறவினர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதனிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்த தனது மகன் நினைவாக தாதராவ் பில்ஹோரே கடந்த 3 வருடமாக 600 பள்ளங்களை அடைத்து வருகிறார். மணல் மற்றும் சரளைக்கற்கள் கலவை கொண்டு பள்ளங்களை அடைத்து வரும் தாதராவ் பில்ஹோரே, காய்கறிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

தனது மனைவி மற்றும் மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தாதராவ் பில்ஹோரே கூறுகையில், ப்ரகாஷின் திடீர் மரணம் எங்கள் வாழ்வில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவனை நினைத்து தான், இந்த வேலையை நான் செய்து வருகிறேன். என் மகன் மாதிரி யாரும் இது போல் விபத்தில் சிக்கி உயிரிழக்ககூடாது எனக் கூறினார். 

இதனிடையே அரசாங்க புள்ளிவிவரங்களின் படி, கடந்த வருடம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக விபத்தில் சிக்கி பலியானவர்களில் எண்ணிக்கை 3597 எனத் தெரியவந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 10 பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நாட்டிலேயே மும்பை நகரம் தான் அதிக பள்ளங்களை கொண்ட நகரம் எனவும், விரைவில் பள்ளங்கள் அதிகமுள்ள மாநகரமாக மும்பை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story