குழந்தை பிச்சைக்காரர்களை ஒழித்து நாட்டுக்கு எடுத்துக்காட்டாக டெல்லியை உருவாக்குங்கள்; மேனகா காந்தி


குழந்தை பிச்சைக்காரர்களை ஒழித்து நாட்டுக்கு எடுத்துக்காட்டாக டெல்லியை உருவாக்குங்கள்; மேனகா காந்தி
x
தினத்தந்தி 8 Oct 2018 3:42 PM GMT (Updated: 8 Oct 2018 3:42 PM GMT)

டெல்லியில் தெருவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை காப்பகங்களுக்கு அனுப்பி நாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக தலைநகரை உருவாக்க மத்திய மந்திரி மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி மேனகா காந்தி 4 பெண் துணை காவல் ஆணையர்களை இன்று சந்தித்து பேசினார்.

அஸ்லம் கான், மேக்னா யாதவ், மோனிகா பரத்வாஜ் மற்றும் நுபுர் பிரசாத் ஆகிய 4 பேரிடமும், தெருவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை முற்றிலும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளியுங்கள்.

அவர்களை தத்து எடுக்கும் வகையிலோ அல்லது காப்பகங்களிலோ தங்க வையுங்கள்.  இதனால் முறையான கவனிப்பு மேற்கொள்ளப்படும்.  பல குழந்தைகள் போதை பொருள் கொடுக்க வைக்கப்பட்டு தெருக்களில் படுத்து கிடக்கின்றனர்.  அவர்களின் பெற்றோர் என கூறி கொள்பவர்கள் உண்மையில் அவர்களுடைய பெற்றோர்கள் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை.

உங்களது மாவட்டங்களை குழந்தை பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளாக உருவாக்க வேண்டிய நடவடிக்கைகளை தொடங்குங்கள் என கேட்டு கொண்டார்.

டெல்லியை நாட்டின் பிற பகுதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உருவாக்குங்கள் என்றும் மேனகா காந்தி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story