தேசிய செய்திகள்

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனுஅவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Sabarimala review petition The Supreme Court's refusal to investigate an emergency case

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனுஅவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனுஅவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்த மறுஆய்வு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
புதுடெல்லி,

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நிலைதான் இவ்வளவு காலமும் இருந்து வந்தது.

இந்த நடைமுறையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை (தற்போது ஓய்வு பெற்று விட்ட) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அந்த அமர்வு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று, அய்யப்பனை தரிசிப்பதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு, ஒரு சில பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும்கூட, பெருமளவில் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது. மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் பிரம்மச்சாரியான அய்யப்பனை வழிபட அனுமதிக்கக் கூடாது என்ற ஆகம விதி மீறப்பட்டுள்ளதாக கருத்து எழுந்துள்ளது. மேலும், மத நம்பிக்கையில் கோர்ட்டின் தலையீடு கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் மறுஆய்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் அவர், “சபரி மலை கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது; மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது; தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது மக்களின் பெருவாரியான போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் உணர்வுகளை மதித்து அனுமதி வழங்கியது போல, அய்யப்ப பக்தர்களின் மத உணர்வு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்த தீர்ப்பு புரட்சிகரமானது என கூறலாம். ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வரவேண்டும் என்று விரும்புகிறவர்களால் வரவேற்கப்படலாம். ஆனால் வழக்கின் தகுதிநிலையை கருத்தில் கொள்கிறபோது, இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்கத்தகுந்தது அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று நாயர் சேவை சங்கத்தின் சார்பிலும் ஒரு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், வழக்குதாரர் சார்பில் வக்கீல் ஜே.மேத்யூ நெடும்பாரா நேற்று ஆஜராகி, மறுஆய்வு மனுவின் முக்கியத்துவம் கருதி இதனை அவசர வழக்காக எடுத்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அத்துடன், சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 16-ந் தேதி திறக்கப்பட உள்ளதால், ஏற்கனவே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இந்த வழக்கானது, விரைவில் விசாரணைக்காக பட்டியலிடப்படும்; ஆனால் தசரா விடுமுறைக்கு பின்னர்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

அதே நேரத்தில் மறுஆய்வு மனுவைப் பொறுத்தமட்டில், திறந்த நீதிமன்ற அரங்கில் விசாரணை நடத்தப்படாது, நீதிபதிகள் அறையில்தான் விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

வழக்குதாரர் கேட்டபடி, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு தடையும் விதிக்கப்படவில்லை.

தசராவையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் 15-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. 21-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே தசரா விடுமுறைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டு 22-ந் தேதி இயங்க தொடங்கும். அதன் பின்னர்தான் மறு ஆய்வு மனுக்கள் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை எப்போது? சுப்ரீம் கோர்ட்டு இன்று முடிவு செய்கிறது
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் மீது எப்போது விசாரணை நடத்துவது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று முடிவு செய்கிறது.