நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை சிவசேனா திட்டவட்டம்


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை சிவசேனா திட்டவட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-20T00:51:47+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

சிவசேனா கட்சி சார்பில் தசரா பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அங்கு நடந்தது. கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து திரளாக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொண்டர்கள் மத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் வீழ்ச்சி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, இந்துத்துவா கொள்கை, அயோத்தி ராமர் கோவில் விவகாரம், பணம் மதிப்பிழப்பு விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய மற்றும் மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மோடி கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விட்டார். மோடி பிரதமரான பிறகு அயோத்திக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நான் நவம்பர் (அடுத்த மாதம்) 25-ந் தேதி அயோத்தி செல்கிறேன். அப்போது ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் தாமதம் ஏன்? என்று பிரதமரை கேள்வி கேட்பேன். நாங்கள் பிரதமருக்கு எதிரிகள் அல்ல. ஆனால் மக்களின் உணர்வில் விளையாட நாங்கள் விரும்பவில்லை.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றியை மோடி அலை என்று கூறி பெரிது படுத்தினார்கள். ஆனால், அதுபோன்ற அலை தற்போது நாட்டில் எங்கும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. தேர்தலை சந்திக்க சிவசேனா தொண்டர்கள் தயாராக வேண்டும். டெல்லியில் நாங்கள் காவி கொடியை ஏற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டதுடன், தற்போது மத்திய, மராட்டிய அரசுகளில் அக்கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் உத்தவ் தாக்கரேயின் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story