சபரிமலையில் தந்திரி அலுவலகத்தில் மொபைல் போன் ‘ஜாமர்’ கருவி பொருத்தம் - கேரளா போலீஸ் நடவடிக்கை


சபரிமலையில் தந்திரி அலுவலகத்தில் மொபைல் போன் ‘ஜாமர்’ கருவி பொருத்தம் - கேரளா போலீஸ் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 11:09 AM GMT (Updated: 5 Nov 2018 11:09 AM GMT)

சபரிமலையில் தந்திரியை பத்திரிக்கையாளர்கள் தொடர்புக் கொள்ள முடியாத வகையில் போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட உள்ளநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலைக்கு சென்ற வாகனங்களை காலையில் போலீசார் சோதனையை நடத்தியதால், பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

 கடந்த மாதம் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்திய போது தந்திரிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசினர். லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கையை தடுக்கும் வகையாக சபரிமலையில் தந்திரி அலுவலகத்தில் மொபைல் போன் ‘ஜாமர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்படும் நிலையில் தந்திரியை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க முயன்று வருகின்றனர். இதேபோன்று அரசியல் கட்சி தலைவர்களும் தந்திரி மற்றும் கோயில் நிர்வாகிகளை தொடர்புக் கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில் அருகேயுள்ள தந்திரியின் அலுவலகத்திற்கு வெளியே மொபைல் போன்களை முடக்கும் ஜாமர் கருவியை போலீஸ் பொருத்தியுள்ளது. இதுகுறித்து கேரள அரசு சார்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

Next Story