தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை - மத்திய அரசு


தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 9 Nov 2018 1:56 PM GMT (Updated: 9 Nov 2018 1:56 PM GMT)

ரஷியாவில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்கிறோமே தவிர, தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புதுடெல்லி,  


 ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்துள்ளது. இக்கூட்டம் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது ஆனால் ஆப்கானிஸ்தான் அரசு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதால் தள்ளிப்போனது. இந்நிலையில் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா, ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் தலீபான்களும்,ஆப்கானிஸ்தான் உயர் அமைதி கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் மறுகட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவரும் இந்தியாவும் இக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்து கொண்டது. இந்தியாவின் சார்பில் ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் அமர்சின்காவும், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவனும் கலந்து கொண்டனர். தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை என்பது தொடர்பான கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேசுகையில், ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷியா நடத்திய கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்றாலும், தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார். 

ரஷியாவின் நடத்திய கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் கலந்து கொள்வது என்பது மத்திய அரசு எடுத்த முடிவு ஆகும். இந்த அளவில் பங்கேற்பதற்கு எதற்காக முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த விளக்கத்திற்குள் நான் உண்மையிலேயே செல்ல முடியாது. தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக நாங்கள் எங்கே கூறினோம்? நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. ரஷியா நடத்துகிற ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று மட்டுமே சொன்னோம். அதிகாரபூர்வமற்ற முறையில் அதில் கலந்து கொள்வது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றுதான் சொன்னோம். கூட்டத்தில் நாம் பங்கேற்பது என்பது மத்திய அரசு பரிசீலித்து எடுத்த முடிவு ஆகும் என்று தெரிவித்துள்ளார். 


Next Story