4½ ஆண்டு கால ஆட்சியில் 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு


4½ ஆண்டு கால ஆட்சியில் 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:30 PM GMT (Updated: 10 Nov 2018 8:12 PM GMT)

4½ ஆண்டு கால ஆட்சியில் குறிப்பிட்ட 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

சரமா,

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக நாளை(12-ந் தேதி) மற்றும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று அவர் கான்கெர் மாவட்டத்தில் உள்ள சரமா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.

அவர் கூறியதாவது:-

கடந்த 4½ ஆண்டுகளில் மோடி ரூ.3½ லட்சம் கோடியை 15 பணக்காரர்களுக்கு கடனாக கொடுத்து உள்ளார். ஆனால் நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே போதுமானது.

இதைப்போல் 10 மடங்கு மதிப்புள்ள கடன் தொகையை 15 தொழில் அதிபர்களுக்கு கொடுத்துவிட்டு அதை மோடி தள்ளுபடியும் செய்து விட்டார். அரசின் கஜானா சாவிகளை மோடி குறிப்பிட்ட 15 தொழில் அதிபர்களிடம் மட்டும் ஒப்படைத்தார். இதுதான் மோடி அரசின் 4½ ஆண்டு கால சாதனை.

அதேநேரம் இந்த கஜானா சாவிகள் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், பழங்குடியினரிடம் தரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த 2 மாநிலங்களுமே மிகப்பெரிய வேளாண் மையங்களாக உருவாகும்.

நாட்டிற்கு தேவையான உணவு, பழங்கள், காய்கறிகளை வினியோகிக்கும் மாநிலங்களாக இவை திகழும். எனவே காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.



Next Story