அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்


அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 1:43 PM GMT (Updated: 12 Nov 2018 1:43 PM GMT)

அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டு உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மும்பை,

யவத்மால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 13 பேரை வேட்டையாடியதாக கூறப்படும் அவ்னி என்ற பெண் புலியை அண்மையில் வனத்துறையினர் சுட்டு கொன்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரியான மேனகா காந்தியும் பெண் புலி சுட்டு கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் மாநில வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கும், மத்திய மந்திரி மேனகா காந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பதவி விலகும்படி கூறினார்கள்.

பெண் புலி சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நேற்று மாலை தாதர் சிவாஜி பார்க்கில் பேரணி நடத்துவதற்கு பொதுமக்கள் திரண்டனர். இதற்கு போலீஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

இருப்பினும் போலீசாரின் தடையை மீறி அவர்கள் சிவாஜி பார்க்கில் பேரணி நடத்தினார்கள். இதில் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும் கலந்து கொண்டார்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் சுட்டு கொல்லப்பட்ட அவ்னி புலியின் 2 குட்டிகளை பாதுகாக்கும்படியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில், அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டு உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது என மூத்த வன துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், புலியை கொன்ற துப்பாக்கி குண்டானது புலியின் பின்புறம் இருந்து வந்துள்ளது.  இது இடது முன்னங்காலில் துளைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துப்பாக்கியால் சுடும்பொழுது புலியானது அவரை நோக்கி இல்லாமல் வேறு திசையை நோக்கி சென்றுள்ளது.  புலியின் உடலில் ரத்த இழப்பு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனால் புலி போன்ற ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினத்தினை பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன என்பது நிரூபணம் ஆகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்காப்புக்காக சுடப்பட்டது என சுட்டவர் கூறியது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், அது உண்மையெனில், பின்னர் எப்படி குண்டானது புலியின் பின்புறம் இருந்து வந்திருக்கும் என்று கூறினார்.


Next Story