ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்: டாசால்ட் நிறுவன சிஇஓ விளக்கம்


ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்: டாசால்ட் நிறுவன சிஇஓ விளக்கம்
x
தினத்தந்தி 13 Nov 2018 7:08 AM GMT (Updated: 13 Nov 2018 7:08 AM GMT)

ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம் என்று டாசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ‘ரபேல்’ போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த பேரத்தில் ‘ரபேல்’ போர் விமானங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ததிலும், விமானங்களை தயாரித்து வழங்குவதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் ‘ரபேல்’ போர் விமான பேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், ரபேல் விமானத்தை தயார் செய்யும் டாசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராபியர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ரபேல் போர் விமானங்களை, டசால்ட்  நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தவிர மேலும் 30 நிறுவனங்கள் பங்குதாரராக உள்ளன. ஒப்பந்தப்படி 40 சதவீதத்தை அந்த  நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. 40 சதவீதத்தில் 10 சதவீதம் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு ஆகும்.

இந்தியாவிற்கு ரபேல் விமானம் சப்ளை செய்யும் விஷயத்தில் நான் பொய் கூறவில்லை. இந்த விஷயத்தில் நான் கூறியதும், வெளியிட்ட அறிக்கைகளும் உண்மையானவை. பொய் கூறும் பழக்கம் எனக்கு இல்லை. ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நான் பொய் கூற மாட்டேன். டசால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான். 

1953 ஆம் ஆண்டு   நேரு ஆட்சி காலத்திலேயே எங்கள் நிறுவனம் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. அதன் பிறகு, அடுத்த பிரதமர்கள் பதவியில் இருந்தபோது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு  கட்சிக்காகவும் நாங்கள் பணியாற்றவில்லை. இந்திய விமானப்படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சப்ளை செய்கிறோம். இதுதான் முக்கியமானது ஆகும். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணத்தை நாங்கள் போடவில்லை. ஜேவி (டசால்ட் -ரிலையன்ஸ்) நிறுவனத்துக்கு மட்டுமே பணம் சென்றது. 18 விமானங்களை வாங்கும் போது என்ன விலையோ அதே விலைதான் 36 போர் விமானங்களின் விலையாகும். 36 என்பது 18 -ன் இரு மடங்கு என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே, என்னைப்பொறுத்தவரை விலை இரு மடங்கு ஆகியிருக்க வேண்டும். 

ஆனால், அரசுகளுக்கு இடையேயான நேரடி விவகாரம் என்பதால், பேச்சுவார்த்தை நடைபெற்றது. 9 சதவீதம் நான் விலையை குறைத்தேன். ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story