சுற்றுலா வாகனம் அருகே வந்த மிரட்சியில் அவர்களை துரத்திய பெண் புலி


சுற்றுலா வாகனம் அருகே வந்த மிரட்சியில் அவர்களை துரத்திய பெண் புலி
x
தினத்தந்தி 13 Nov 2018 10:42 AM GMT (Updated: 13 Nov 2018 10:49 AM GMT)

மகாராஷ்டிராவில் புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா சென்றவர்களின் வாகனம் அருகே வந்த மிரட்சியில் பெண் புலி ஒன்று அவர்களை துரத்தியுள்ளது.

நாக்பூர்,

மகாராஷ்டிராவில் 9 ஆயிரத்து 116 சதுர கி.மீ. பரப்பளவில் புலிகளுக்கான 6 சரணாலயங்கள் அமைந்துள்ளன.  இவற்றில் பென்ச், மேல்காட், சஹயாத்ரி மற்றும் தடோபா-அந்தேரி ஆகியவை பிரபலம் வாய்ந்தவை.  இங்கு ஒவ்வொரு வருடமும் அதிக அளவிலான வனவாழ் ஆர்வலர்கள் வந்து செல்வர்.

இந்த நிலையில், தடோபா-அந்தேரி புலிகள் சரணாலயத்தில் சோட்டி மது (வயது 3 1/2) என்ற பெண் புலி ஒன்று வசித்து வருகிறது.  இங்கு சுற்றுலா சென்றவர்கள் வாகனம் ஒன்றில் செல்லும்பொழுது, இந்த பெண் புலியின் எல்லையை கடந்து மிக நெருங்கியபடி சென்றுள்ளனர்.

இதனால் மிரட்சி அடைந்த அந்த புலி அவர்களின் வாகனத்தினை பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளது.  வாகனத்தில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறுகின்றனர்.  இதுபற்றிய வீடியோ வெளியாகி வைரலானது.

இதனை தொடர்ந்து வன பகுதியில் அமைந்த அந்த சாலை ஒரு வாரத்திற்கு சுற்றுலாவாசிகள் செல்வதற்கு தடை விதித்து மூடப்பட்டு உள்ளது.

அதன்பின்னர் வனத்துறை அதிகாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தினர்.  அவர்களிடம், புலிகளிடம் இருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் செல்லும்படி கேட்டு கொண்டனர்.

இதேபோன்று வனவாழ் சூழலுக்குள் நுழையும் முன்பு வனதுறை விதிமுறைகளை பின்பற்றும்படி சுற்றுலாவாசிகளையும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

கடந்த 2017-18-ம் ஆண்டில் புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா சென்ற வகையில் ரூ.11.76 கோடி வருவாய் கிடைத்துள்ளது என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Next Story