சபரிமலையில் போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி வரை நீட்டிப்பு


சபரிமலையில் போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி வரை நீட்டிப்பு
x

சபரிமலையில் போடப்பட்டுள்ள போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், போராட்டங்களும் நடந்து வருகிறது.

மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி சன்னிதானம், பம்பை, இளவங்கல், நிலக்கல் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாநில அரசு விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பெரும் சிரமம் அடைவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக கேரள சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தன.

எனினும் இந்த கட்டுப்பாடுகளை விலக்க மாநில அரசு முன்வரவில்லை. மாறாக இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மேற்படி பகுதிகளில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நீட்டிக்கப்படுவதாக சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த உஷா என்ற 48 வயது பெண் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக வந்திருந்தார். ஆனால் வழியிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே கடந்த மாத தொடக்கத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்ட போது கோவிலுக்கு வந்திருந்த 52 வயது பெண் ஒருவரை தடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மரிநல பா.ஜனதா பொதுச்செயலாளர் சுரேந்திரனுக்கு ரன்னி கோர்ட்டு ஜாமீன் மறுத்து உள்ளது.


Next Story