ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு அறிக்கையை ஏற்க முடியாது - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதம்


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு அறிக்கையை ஏற்க முடியாது - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 7:57 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் கூறி இருந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும், இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு முன்வைக்கும் வாதங்களை ஏற்க முடியாது. மேலும் தருண் அகர்வால் குழு அறிக்கையில் ஒரு சில பரிந்துரைகள் மட்டுமே எங்களுக்கு ஏற்புடையதாக உள்ளது. அந்த அறிக்கையில் சில புள்ளி விவரங்கள் தவறாக அளிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது.

உதாரணத்துக்கு ஆலையில் இரண்டு புகைபோக்கிகள் உள்ளன. ஆனால் தருண் அகர்வால் குழு போதுமான அளவு புகை போக்கிகள் இல்லை என்று கூறி இருக்கிறது. எங்களிடம் இரு புகைபோக்கிகள் இருப்பதால், புகைபோக்கிகளின் உயரம் தொடர்பான பிரச்சினை இங்கு எழாது.

ஸ்டெர்லைட் ஆலை, சமூக நலனுக்கான கொடையாக ஆண்டுதோறும் ரூ.10 கோடி வழங்கி வருகிறது. அதற்கு மேல் குடிநீர் வசதி, பள்ளிகள், மருத்துவமனை ஆகியவற்றை புதிதாக ஏற்படுத்துவதற்கு மேலும் ரூ.100 கோடி வழங்க தயாராக இருக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. நக்சலைட்டுகள் குறுக்கீட்டால் போராட்டம் தீவிரம் அடைந்ததால் அரசு துப்பாக்கிசூடு நடத்தியது. அதற்கும் ஆலைக்கும் தொடர்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான யோகேஷ் கன்னா மற்றும் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, “துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு யோகேஷ் கன்னா பதில் அளிக்கையில், “போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய சூழல் எழுந்தது” என்று கூறினார். போராட்டக்காரர்கள் நக்ஸலைட்டுகள் அல்ல என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடுகையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் கிடையாது. ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்தான் அவர்கள் வழக்கு தொடுக்க முடியும். தருண் அகர்வால் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது விதிமுறைகளுக்கு எதிரானது. ஆகவே அந்த குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது. அப்படியே வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் மாசு இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி மட்டும்தான் தருண் அகர்வால் குழு ஆய்வு செய்திருக்க வேண்டும். அதற்கு மேல் ஆலையை திறக்க பரிந்துரை வழங்கியது அவர்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு கூட சில வழக்குகளில் இதுபோன்ற குழுவை அமைக்க இயலாது என்று தெரிவித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமையன்று தொடரும் என்று உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின் போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் அமர்ந்து இருந்தார். வழக்கு விசாரணையின் போது குறுக்கிட முயன்ற அவரை நீதிபதிகள் அனுமதிக்கவில்லை.

விசாரணை முடிந்து திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த உடன் வைகோ எழுந்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக, தான் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வாதாடியதாகவும் இந்த வழக்கில் மனு தாக்கல் செய்திருந்தும் தன்னை வாதிட அனுமதிக்க மறுப்பதை ஏற்க இயலாது என்றும் கூறி தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் எந்த பதிலும் கூறவில்லை.

பின்னர் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வெளியே நிருபர்களை சந்தித்த வைகோ, அடுத்த கட்ட விசாரணையின் போது வாதம் செய்ய தன்னை அனுமதிக்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாகவும் தெரிவித்தார்.

Next Story