ராஜஸ்தான்: தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு


ராஜஸ்தான்: தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி  எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 4:32 AM GMT (Updated: 8 Dec 2018 4:32 AM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிசாகஞ் தொகுதிக்குட்ப்பட்ட ஒரு இடத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான்  மாநில சட்டப்பேரவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில், ஒரு தொகுதியை மட்டும் தவிர்த்து (வேட்பாளர் இறந்ததால்) ஏனைய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில்  72.62 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது.

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  இதற்காக,  மின்னணு வாக்கு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிசாகஞ்ச் தொகுதிக்குட்பட்ட சஹாபாத் என்ற  இடத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கேட்பாரற்று சாலையில் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தகவல் அறிந்து விரைந்து வந்த  தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரத்தை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.  வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்துச்செல்லும் போது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இரண்டு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.


Next Story