அசாம் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு


அசாம் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Dec 2018 5:09 PM GMT (Updated: 9 Dec 2018 5:09 PM GMT)

அசாம் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டாவது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 169 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 895 பஞ்சாயத்து அமைப்புகள்,  895 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும்  8950 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவுபெற்ற நிலையில், சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. தூப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், சுமார் 900 வாக்குச்சாவடிகளில் கடைசி நேரத்துக்கு பின்னரும் வாக்குப்பதிவு நடைபெற்றதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் மாநில தேர்தல் அதிகாரி ஹெச்.என்.போரா தெரிவித்தார்.

மேலும் மற்ற இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், கச்சார், கரிம்கஞ்ச், நல்பாரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இங்கு வரும் 11-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 81.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இருகட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ந் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story