ராஜஸ்தானில் அதிக சுயேட்சைகள் ஆதரவை பிடிப்பதில் காங்கிரஸ்-பாஜக போட்டா போட்டி


ராஜஸ்தானில் அதிக சுயேட்சைகள் ஆதரவை பிடிப்பதில் காங்கிரஸ்-பாஜக போட்டா போட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 8:12 AM GMT (Updated: 11 Dec 2018 10:33 AM GMT)

ராஜஸ்தானில் சுயேட்சைகளின் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ்-பாஜக போட்டாபோட்டி. ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஜெய்ப்பூர்

5 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் மட்டும் தான் ஒரளவுக்கு சிக்கல் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இல்லை.  தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 93 இடங்களிலும், பாரதீய ஜனதா 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ், பாஜக இடையே 10 முதல் 15 இடங்கள் தான் வித்தியாசம் உள்ளது. அதனால், கடைசி நேரத்தில் நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதனால், காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் வெற்றி ஆட்சி அமைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக, சுயேட்சை வேட்பாளர்கள் 10-க்கும் அதிகமானோர் முன்னிலை வகிக்கின்றனர். அதேபோல், ஹனுமன் பெனிவாலின் ராஷ்டிரிய லோன் அந்திரிக் கட்சி 3 முதல் 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாரதிய பழங்குடியின கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

199 தொகுதிகள் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 100 இடங்கள் தேவை. அதனால், காங்கிரஸ் அல்லது பாஜக 80 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் நிலையில், மற்றவர்களின் உதவியுடன் ஆட்சியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதில், சுயேட்சைகள் மிகவும் முக்கியமான சக்தியாக இருப்பார்கள் என தெரிகிறது. அதேபோல், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் அந்த்ரிக் கட்சி ஆகியவை முக்கிய பங்களிப்பு செலுத்தும்.

தேர்தல் பிரசார கால கட்டத்தின் போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த பலரும் தங்களுக்கு சீட் வழங்காததால் அதிருப்தியை வெளிப்படுத்தி, வெளியேறினர். அதில் பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர். சிலர் மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டனர். பார்மெர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் தான் 5 முதல் 7 பேர் வரை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி  நிலவுவதால்  வெற்றிபெறும் நிலையிலுள்ள 8 சுயேட்சைகளுடன் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டார். இந்த நிலையில் அவர்களுக்கு பாரதீய  ஜனதாவும்  வலைவிரித்து உள்ளது. 

Next Story