தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு


தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 11:15 PM GMT (Updated: 13 Dec 2018 9:31 PM GMT)

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் 2–வது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

ஐதராபாத், 

ஆந்திராவில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி சட்டசபையை கலைத்து தேர்தலிலும் போட்டியிட்டார். மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 7–ந் தேதி தேர்தல் நடந்தது.

இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை மெகா கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன. பா.ஜனதா தனித்து களம் கண்டது.

இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஜோதிடர் குறித்து கொடுத்த நேரப்படி மதியம் 1.34 மணிக்கு சந்திரசேகர ராவ் முதல்–மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மகமத் அலி மந்திரியாக பதவி ஏற்றார். மேலும் 18–க்கும் மேற்பட்ட மந்திரிகள் இன்னும் சில நாட்களில் பதவி ஏற்க உள்ளனர். தெலுங்கானா முதல்–மந்திரியாக சந்திரசேகரராவ் 2–வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story