தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு + "||" + Rafael fighter aircraft deal No abuse has happened - Supreme Court verdict

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ -  சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் புகார், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவின் விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி போடப்பட்டது.


இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இதுபற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் தாக்கல் செய்தனர்.

6-வதாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஒரு வழக்கு தாக்கல் செய்து, ரபேல் போர் விமான பேரத்தில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.

இந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு முன் கடந்த அக்டோபர் 10-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், வழக்குகளை விசாரணைக்கு ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், “இந்த வழக்குகள் பொது நல வழக்குகள் அல்ல. அரசியல் ஆதாயம் பெறுவதற்காக போடப்பட்டவை இந்த வழக்குகள். இவற்றில் எழுப்பியுள்ள பிரச்சினை, தேச பாதுகாப்பு தொடர்பானது, அத்தகைய பிரச்சினைகளை நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. எனவே வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

மேலும், “தேச பாதுகாப்பு நலனையொட்டியும், ராணுவ கொள்முதல் நடைமுறை தொடர்பான பிற பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இந்த பேரத்தின் விவரங்களை யாருக்கும் காட்ட முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஒப்பந்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த அறிக்கையை நவம்பர் 12-ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், ரபேல் போர் விமானத்தின் விலைப்பட்டியல், அதன் செயல்திறன், சிறப்பு அம்சங்கள், ரபேல் போர் விமான பேர ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

நவம்பர் 14-ந்தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு, டிசம்பர் 14-ந்தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பறிகொடுத்த நிலையில், ரபேல் வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

3 நீதிபதிகள் அமர்வுக்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து அளித்த தீர்ப்பில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இந்த வழக்கில், ரபேல் போர் விமான பேரத்தில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் வணிக ரீதியிலான பலன் பெறுவதற்கான வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.

* விலை மதிப்பீட்டு விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பது கோர்ட்டின் வேலை அல்ல. (காங்கிரஸ் கூட்டணி அரசு நிர்ணயித்த விலை, பாரதீய ஜனதா கூட்டணி அரசு நிர்ணயித்த விலை ஒப்பீடு)

* ரபேல் போர் விமான கொள்முதல், விலை நிர்ணயம், உடன் இணைந்து பணியாற்றும் கூட்டாளி நிறுவன தேர்வு ஆகியவற்றில் கோர்ட்டு தலையிடுவதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை.

* இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானம் போன்ற 4-ம் தலைமுறை மற்றும் 5-ம் தலைமுறை விமானங்கள் சேர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இதில் சந்தேகம் இல்லை. விமானத்தின் தரம் குறித்த கேள்விக்கு இடம் இல்லை.

* ரபேல் போர் விமான கொள்முதலில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் எல்லா அம்சங்களையும் பேரத்தில் தெளிவுபடுத்தி உள்ளனர். இதில் கோர்ட்டு தலையிடுவதற்கு எந்த காரணத்தையும் நாங்கள் கண்டறியவில்லை.

* ரபேல் போர் விமான பேரம், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டபோது யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

* ரபேல் போர் விமான பேரத்தில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே வெளியிட்ட அறிக்கைக்கு பின்னர்தான் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது நீதித்துறை பரிசீலனைக்கு அடிப்படையாக அமையாது. (ரபேல் போர் விமான தயாரிப்பில், பிரான்ஸ் நிறுவனமான ‘டசால்ட்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இந்தியாவின் அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு பரிந்துரை செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து தெரிவித்தார்).

* 36 ரபேல் விமானங்களை வாங்குங்கள் என்றோ, 126 ரபேல் விமானங்களை வாங்குங்கள் என்றோ மத்திய அரசை கோர்ட்டு கட்டாயப்படுத்த முடியாது. அது மத்திய அரசின் முடிவை பொறுத்தது.

* கோர்ட்டு ஆய்வின் முன் சில சவால்கள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை நாங்கள் மனதில் கொள்ள வேண்டியது இருக்கிறது. ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் என்பது நாட்டின் இறையாண்மைக்கு முக்கியமானதாகும். அதில் தலையிடுவதற்கு நீதித்துறைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம்தான் இருக்கிறது.

* இதில் டெண்டர் என்பது சாலைகள் அமைப்பதற்கோ, பாலங்கள் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கோ அல்ல. இது போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை கோரியது ஆகும்.

* அது சட்ட விரோதமானது, பகுத்தறிவுக்கு புறம்பானது, சரி இல்லாதது என்ற 3 நிலைகளில் மட்டும்தான் கோர்ட்டு ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

* ரபேல் போர் விமான கொள்முதல் நடவடிக்கையில், உண்மையிலேயே சந்தேகப்படுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என்று நாங்கள் திருப்திகொள்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் ரபேல் போர் விமான பேரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளதால், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த வழக்கு கடந்து வந்த பாதை

ஆகஸ்டு 28, 2007: 126 போர் விமானங்கள் வாங்க ராணுவ அமைச்சகம் டெண்டர் கோரியது.

ஜன.30, 2012: பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம்தான், மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்தது.

மார்ச் 13, 2014: டசால்ட் நிறுவனத்துக்கும், பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.லுக்கும் இடையே 108 விமானங் களை தயாரிப்பதற்கான பணி பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆக.8, 2014: பறக்கும் நிலையில் 18 விமானங்கள் 4 ஆண்டுகளிலும், மீதி 108 விமானங்கள் 7 ஆண்டுகளிலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அப்போதைய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

ஏப்.10, 2015: பறக்கும் நிலையில் 36 போர் விமானங்கள் பிரான்சிடம் இருந்து வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் பற்றி அறிவிக்கப்பட்டது.

ஜன.26, 2016: 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

செப்.23, 2016: அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

நவ.18, 2016: ஒரு ரபேல் விமானத்தின் விலை ரூ.670 கோடி என்றும், அனைத்து விமானங்களும் 2022-ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

டிச.31, 2016: 36 விமானங்களுக்கு கொடுக்கப்படும் மொத்த விலை ரூ.60 ஆயிரம் கோடி என்று டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இது, அரசு கூறியதை விட 2 மடங்கு விலை ஆகும்.

மார்ச்.13, 2018: சுயேச்சையான விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்.

செப்.5, 2018: மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்.

அக்.8- மற்றொரு பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்.

அக்.10- ஒப்பந்தம் குறித்து முடிவு எடுத்தது பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டது.

அக்.24- முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்.

அக்.31- விமானத்தின் விலை விவரம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

நவ.12- விலை விவரங்களை மத்திய அரசு, மூடி முத்திரையிட்ட உறையில் சமர்ப்பித்தது.

நவ.14- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

டிச.14- மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமான ஒப்பந்தம் : சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
2. ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்தவா? தொழில் அதிபர் பயன் அடையவா? மோடிக்கு சிவசேனா கேள்வி
ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்த போடப்பட்டதா? அல்லது தொழில் அதிபர் பலன் அடையவா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
3. ‘ரபேல்’ விவகாரத்தில் மற்றொரு அவமானம் அம்பலம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருப்பதால், மற்றொரு அவமானம் அம்பலமாகி விட்டதாக ராகுல் காந்தி கூறினார்.
4. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை மோடி சுப்ரீம் கோர்ட்டில் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
5. ரபேல் போர் விமான ஆவணங்களை கேட்டதால்தான் அலோக் வர்மா நீக்கம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரபேல் போர் விமான ஆவணங்களை கேட்டதால்தான் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.