99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை பிரதமர் மோடி உறுதி


99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை பிரதமர் மோடி உறுதி
x
தினத்தந்தி 18 Dec 2018 1:48 PM GMT (Updated: 18 Dec 2018 1:48 PM GMT)

சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.


மும்பை, 


பிரதமர் மோடி மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யாணில் 2 மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இத்துடன் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். 

முன்னதாக பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் நினைவாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்,  ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தற்போது விரிவான முறையில் அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆடம்பர பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.  இதை மேலும் எளிமையாக்கும் வகையில், 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன்மூலம் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்பட 99 சதவீத பொருட்களுக்கு 18 சதவீதமோ அல்லது அதற்கு குறைவாகவோ வரி விதிக்கப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.  வணிக நிறுவனங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் ஜி.எஸ்.டி. முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் முயற்சியாகும்.

ஜி.எஸ்.டி. அமலுக்கு முன் 65 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்தும் முறையில் பங்கு பெற்று இருந்தன. ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கை மேலும் 55 லட்சம் அதிகரித்துள்ளது.  ஜி.எஸ்.டி.க்கு முன்னர் நடைமுறையில் இருந்த வாட் போன்ற வரிகள் அமலில் இருந்தன. பின்னர் தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டு, வரி விதிப்பு முறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.  பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜி.எஸ்.டி. முறை தேவையாக இருந்தது. அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தக சந்தையில் இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 

பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணி தொடரும் என்றார். 

Next Story