என்னை மவுன பிரதமர் என்றார்கள்; ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை - மன்மோகன் சிங்


என்னை மவுன பிரதமர் என்றார்கள்; ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை - மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 18 Dec 2018 3:32 PM GMT (Updated: 18 Dec 2018 3:32 PM GMT)

ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


புதுடெல்லி,


காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன மன்மோகன்சிங்’ என்று கிண்டல் அடித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியை பல்வேறு விவகாரங்களில் விமர்சனம் செய்து வருகிறர் மன்மோகன் சிங். கடந்த ஏப்ரலில் மன்மோகன் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பேட்டியளித்து பேசிய போது,  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அரசில் நான் பிரதமராக இருக்கும் போது பல்வேறு விஷயங்களில் முன்கூட்டியே கருத்து கூறாமல் இருந்ததற்காக என்னை மவுன மன்மோகன் சிங் என்று பாஜகவினர் அழைத்தார்கள். இதைப் பெயரோடு தான் நான் ஆட்சி முழுவதும் வாழ்ந்தேன் என்றார்.  

அப்போது காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது, உ.பி. உன்னாவ் நகரில் இளம்பெண்ணை பா.ஜனதா எம்எல்ஏ பலாத்காரம் செய்தது போன்ற சம்பவங்கள் குறித்து மன்மோகன் சிங் பேசுகையில், ‘வாய்திறந்து பேசுங்கள், மோடி எனக்கு நீங்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் உங்களுக்கு நானும் கூறுகிறேன்” என்று காட்டமாக தெரிவித்தார்.  இதேபோன்று சமயம் கிடைக்கும் போது எல்லாம் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வருகிறார் மன்மோகன் சிங்.

இப்போது ஊடகங்களை தவிர்க்கும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.  “என்னை மவுன பிரதமர் என்று அழைத்தார்கள். அவர்களுக்கு இந்த புத்தகம் (மன்மோகன் சிங்கின்  'Changing India' ) பதில் அளிக்கும் என்று நினைக்கிறேன். ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை. எப்போதும் ஊடங்களை சந்தித்து பேசுவேன், ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் திரும்பி வருகையில் செய்தியாளர்களிடம் பேசுவேன்,” என்று கூறியுள்ளார். 


Next Story