தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது


தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதியாக  ரூ1,146 கோடியை  மத்திய அரசு ஒதுக்கியது
x
தினத்தந்தி 31 Dec 2018 10:56 AM GMT (Updated: 31 Dec 2018 10:56 AM GMT)

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கடந்த  நவம்பர் 16-ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதை தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மத்திய குழு வந்து பார்வையிட்டு சென்று மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த நிலையில்  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்  இன்று  உயர்மட்ட குழு கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1, 146.12  கோடி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.353 கோடி ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Next Story