கொடநாடு கொலைகள்-கொள்ளை: ஆவணப்படம் வெளியீடு


கொடநாடு கொலைகள்-கொள்ளை: ஆவணப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 11 Jan 2019 1:12 PM GMT (Updated: 11 Jan 2019 1:12 PM GMT)

கொடநாடு கொலைகள் - கொள்ளை தொடர்பான ஆவணப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொடநாடு சதித்திட்டத்தில் சயனுக்கு பெரும் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.

2017ல் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதும், எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் இன்று தான் நடத்திய புலனாய்வை ஆவணப்படமாக வெளியிட்ட பின்  மேத்யூஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது,  

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பணமும், நகையும் இருந்தது புலனாய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர் வெளியிட்ட ஆவணப்படத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது கொடநாட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்து வருமாறு ஓட்டுநர் கனகராஜ் என்னிடம் கூறினார். ஆவணங்களை முதல்வரிடம் தர வேண்டும் என்று கூறியதாகவும் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த சயான் கூறியுள்ளார்.

ஆத்தூரில் கார் மோதிய விபத்தில் உயிரிழந்த கனகராஜ்தான் (ஜெயலலிதாவின் ஓட்டுநர்)  கொடநாடு எஸ்டேட்டில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்து முதல்வரிடம் கொடுக்க திட்டமிட்டவர் என்றும் அந்த ஆவணப்படம் கூறுகிறது. ஆவணங்களை எடுத்து வரும் திட்டத்துக்காக அவர் ரூ.5 கோடி பெற்றார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Next Story