தேசிய செய்திகள்

சபரிமலையில் நாளை மகரஜோதி: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் + "||" + Tomorrow in Sabarimala Makara Jyothi

சபரிமலையில் நாளை மகரஜோதி: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலையில் நாளை மகரஜோதி: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இப்போதே பக்தர்கள் ஏராளமானோர் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,

உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் அய்யப்பனுக்கு நெய்அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு ஜோதி தரிசனம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலையில் வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு மேல் மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறும். இதில் கலந்துகொள்வதற்காக இப்போதே பக்தர்கள் ஏராளமானவர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். 

மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனத்தில் ஆன பெட்டகங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து எடுக்கப்பட்டு அதிகாலை பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பொதுமக்களின் தரிசனத்திற்கு பிறகு மேளதாளம் முழங்க வானத்தில் கருடன் வட்டமடித்து வலம் வர பக்தி பரவசத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் திருவாபரண பெட்டிகள் சபரிமலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த ஊர்வலம் சாமி அய்யப்பனின் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடை பயணமாக நாளை மதியம் பம்பை சென்றடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சன்னிதானத்தில் திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்குகீழ் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பதினெட்டாம்படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார். பிரகாசமான ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். மேலும் மகர சங்ரம பூஜை வழிபாடு நடைபெறும். அப்போது திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி அய்யப்பன்மார்கள் புடைசூழ கொண்டு வரப்படும் நெய் மூலம் அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

மகரவிளக்கு பூஜைக்காக ஆபரண பெட்டிகள் எடுத்துவர வசதியாக அன்றையதினம் பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பம்பையில் இருந்து அய்யப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை பதினெட்டாம்படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அய்யப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பிறகு இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

திருவாபரண ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் 800 பேருக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் பந்தளம் அரண்மனை நிர்வாகம் சார்பில் ஆபரணங்களை சுமந்து வரும் பக்தர்கள் 40 பேருக்கு புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டையும் வழங்கப்பட்டு உள்ளது. திருவாபரணங்கள் கொண்டுவரப்படும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்பொருட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மகர விளக்கு சீசன் முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.  

ஆசிரியரின் தேர்வுகள்...