உ.பி.யில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விட்டது தவறு : கருத்து கணிப்பில் தகவல்


உ.பி.யில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில்  இருந்து காங்கிரசை கழற்றி விட்டது தவறு : கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2019 6:36 AM GMT (Updated: 24 Jan 2019 7:30 AM GMT)

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விட்டது தவறு என இந்தியா டுடே நடத்திய தேசத்தின் மனநிலை கருத்து கணிப்பில் தெரிய வந்து உள்ளது.

புதுடெல்லி,

வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளுக்கு சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை  கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  அமேதி மற்றும் , ரேபரேலி தொகுதிகளில் மட்டும்  போட்டியிடபோவது இல்லை என  இரு கட்சிகளும் அறிவித்து உள்ளன. காங்கிரஸ் தனித்து விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து உள்ளார். இதனால் உத்தரபிரதேசத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. 

இந்த மும்முனை போட்டி  யாருக்கு சாதகமாக இருக்கும் என இந்தியா டுடே சார்பில் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. அந்த  கருத்து கணிப்பில்  பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியில்  இருந்து காங்கிரசை  கழற்றி விட்டது தவறு என தெரிய வந்து உள்ளது.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ,காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் மற்றவர்கள் பி.ஜே.பிக்கு எதிராக ஒரு அணியாக போட்டியிட்டால் பி.ஜே.பிக்கு ஒரு பெரிய பாதிப்பை  ஏற்படுத்தி இருக்க முடியும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

இந்தியா டுடே எடுத்த  தேசத்தின் மனநிலை என்ற கருத்து கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மொத்தம் 2,478 பேரிடம் எடுக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி மற்றும் அதன் கூட்டாளியான அப்னா தளம்  80 இடங்களில் போட்டியிட்டு  73 இடங்களை வென்றன. அவர்களது மொத்த வாக்கு சதவீதம்  43.3 ஆகும்.

பாரதீய ஜனதா-அப்னா தளம்  இந்த முறை 73 இடங்களில் இருந்து 5 ஆக குறைந்து விடும்.  பாஜக -அப்னா தளம் ஓட்டு சதவீதம் 2014-ல்  இருந்த 43.3 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறையும். இது பாரதீய ஜனதாவுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையாக இருந்து இருந்தால் ஏற்படக்கூடிய மாற்றமாகும்.  இத்தகைய மெகா கூட்டணி அமைந்து இருந்தால் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் 75 இடங்களை வென்றெடுக்க வாய்ப்புள்ளது என  இந்தியா டுடே-கர்வீ  எடுத்த தேசத்தின் மனநிலை கருத்து கணிப்பில் தெரிய வந்து  உள்ளது. இந்த கூட்டணியின் வாக்கு வங்கி  2014-ல் இருந்த 56.7 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக அதிகரிக்கும் என கருத்து கணிப்பில்  கூறப்பட்டு  உள்ளது.

Next Story