இனி எங்களுடைய கட்டுப்பாட்டில்தான் பா.ஜனதா கூட்டணிக்கு சிவசேனாவின் பதில்


இனி எங்களுடைய கட்டுப்பாட்டில்தான் பா.ஜனதா கூட்டணிக்கு சிவசேனாவின் பதில்
x
தினத்தந்தி 28 Jan 2019 12:31 PM GMT (Updated: 28 Jan 2019 12:31 PM GMT)

2019 தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா கூட்டணி தொடர்பாக சிவசேனா பதில் அளித்துள்ளது.

மும்பை,

2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  24 இடங்களில் போட்டியிட்ட பா.ஜனதா 23 இடங்களிலும், 20 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா18 இடங்களிலும் வென்றது. 

மராட்டியத்தில் பெரும் வெற்றியை தனதாக்கிய நிலையில் மராட்டிய மாநில சட்டசபைத்தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மோடியின் அலைக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றது. மராட்டியத்தில் முதல்வர் பதவி தன்வசம் வரவேண்டும், அதிகமான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சிவசேனா திட்டமிட்டது. ஆனால் பா.ஜனதா மறுக்கவே இருகட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. அப்போது பா.ஜனதா 122 இடங்களை கைப்பற்றியது. சிவசேனா 63 இடங்களில் வென்றது. 

இதையடுத்து மராட்டிய பா.ஜனதா அரசுக்கு ஆதரவை கொடுத்தது. இதனையடுத்து இரு கட்சிகள் இடையேயும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. மத்திய அமைச்சரவையிலும் சிவசேனாவிற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனையடுத்து பா.ஜனதா அரசை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனியாக போட்டியிட தயாராகுங்கள் என பா.ஜனதா தொண்டர்களிடம் கூறியது மீண்டும் உரசலை அதிகரித்தது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் அதிகரிக்கும் நிலையில் சிவசேனாவை கூட்டணியை விட்டு நீக்க பா.ஜனதா ஆர்வம் காட்டாது என்றே கூறப்படுகிறது. மறுபுறம் மாநிலத்தில் பா.ஜனதாவிற்கு எதிராக தீவிரமாக செயல்படும் சிவசேனா தன்னுடைய வசம் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதில் ஸ்திரமாக உள்ளது.

இந்நிலையில் 2019 தேர்தலில் கூட்டணி என்ற கேள்விக்கு சிவசேனா தன்னுடைய பதிலை தெரிவித்துள்ளது.
 
பா.ஜனதாவும், சிவசேனாவும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “எங்களுக்கு அதுதொடர்பாக எந்த தகவலும் கிடையாது, மீடியா மக்களுக்கு தான் அதிகம் தெரிகிறது. எங்களிடம் அதுபோன்ற எந்தஒரு நோக்கமும் கிடையாது, இதுபோன்ற முன்மொழிவை ஏற்க நாங்கள் இங்கு இல்லை. இனி சிவசேனாவின் கையே ஓங்கும், அந்த வகையில் நாங்கள்தான் பெரிய அண்ணனாக செயல்படுவோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணியை பொருத்தவரை நாங்கள் தான் பெரியண்ணன், அந்த நிலைப்பாடு தொடரும்" என கூறினார். 

Next Story