அயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை


அயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில்  மத்திய அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2019 5:50 AM GMT (Updated: 30 Jan 2019 5:50 AM GMT)

அயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்துகொள்ளும்படி தீர்ப்பு அளித்தது.

அதாவது அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா என்ற அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வு நேற்று அயோத்தி வழக்கை விசாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்த அமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரமுடியாத காரணத்தால் இந்த விசாரணை ரத்து செய்யப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில்,

1991-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அயோத்தியில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

இதில் ராமஜென்ம பூமி நியாஸ் என்ற ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்து அறக்கட்டளை தனக்கு சொந்தமான 42 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டு விண்ணப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் இதுதொடர்பாக அந்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் இது ராமர் கோவில் கட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அயோத்தி இட விவகார 24 வது பிரிவு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் துரிதமாக ஒரு அரசியலமைப்பு பெஞ்ச் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு இன்று கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்து உள்ளார்.

Next Story