எஸ்.சி, எஸ்.டி சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு


எஸ்.சி, எஸ்.டி சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
x
தினத்தந்தி 30 Jan 2019 10:13 AM GMT (Updated: 30 Jan 2019 10:13 AM GMT)

எஸ்.சி, எஸ்.டி சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து விட்டது.

புதுடெல்லி,

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ்  கொடுக்கப்படும் புகாரின் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, நாடு முழுவதும் எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முந்தைய நிலையை தொடரும் வகையில், நாடாளுமன்றத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு தடை விதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், மனுதாரர் ஒருவர் சார்பாக இன்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதிபதிகள் யூயூ லலித் தலைமையிலான அமர்வு முன் இந்த விவகாரத்தை முறையிட்டார்.  எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து மனுக்களும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர். 

Next Story