மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு


மோடி அளித்த  எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Feb 2019 5:50 AM GMT (Updated: 11 Feb 2019 7:46 AM GMT)

மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

புதுடெல்லி:

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு விலகியது. 

பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இரவு 8 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்து உள்ளார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராகுல்காந்தி கூறியதாவது:-

மோடி அளித்த  எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.  அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆந்திர மக்களின் கோரிக்கைகளுக்கு எப்போதும்  ஆதரவாக இருப்பேன். அவர் என்ன மாதிரியான பிரதமர்? அவர் ஆந்திரா மக்களுக்கு அளித்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றவில்லை. மோடி, எங்கு சென்றாலும் பொய் சொல்கிறார். அவரிடம்  எந்தவித நம்பகத்தன்மையையும் பெறவில்லை.

ஒவ்வொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் ஊழல் எதிர்ப்பு விதி உள்ளது.பிரதமர் ஊழல் எதிர்ப்புப் பிரிவை அகற்றினார் என்று இந்து பத்திரிகை செய்தி  வெளியிட்டு உள்ளது. இதற்கு பிரதமர் உதவியது என்பது  தெளிவாகிறது என கூறினார்.

Next Story