பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிரான கருத்து; எம்.எல்.ஏ. மீது கேரள மகளிர் ஆணையம் வழக்கு பதிவு


பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிரான கருத்து; எம்.எல்.ஏ. மீது கேரள மகளிர் ஆணையம் வழக்கு பதிவு
x
தினத்தந்தி 11 Feb 2019 1:02 PM GMT (Updated: 11 Feb 2019 1:02 PM GMT)

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிரான கருத்து கூறிய எம்.எல்.ஏ. மீது கேரள மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் சப்-கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ் (30). இப்பகுதியின் முதல் பெண் சப்-கலெக்டர் இவர்.  கோர்ட்டு உத்தரவை மீறி தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த பணிகளை நிறுத்தும்படி, ரேணு ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது குறித்து ரேணு ராஜூடன் பொதுமக்கள் முன்னிலையில் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசிய ராஜேந்திரன், அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இது தான் முதல் முறை. கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்து தான். இவர் இல்லை. விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும். இவர் போன்றோரை நான் இதுவரை பார்த்ததில்லை. இது போன்று மூளை இல்லாதவர்களை இங்கு பணியமர்த்தி உள்ளனர் என்றார்.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த ரேணு ராஜ், கோர்ட்டு உத்தரவின்படியே நான் நடவடிக்கை எடுத்தேன்.  மூணாறு பகுதியில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  ஆனால் இந்த 4 அடுக்கு கட்டிடம் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வாங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

கடந்த 6ந்தேதி, சட்டவிரோத கட்டிடம் கட்டுவதனை நிறுத்தும்படி பஞ்சாயத்திற்கு மெமோ வழங்கப்பட்டு உள்ளது.  ஆனால் தொடர்ந்து அதற்கான பணி நடந்து வருகிறது.

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்து உள்ளார்.  இந்த நிலையில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிரான கருத்து கூறிய எம்.எல்.ஏ. மீது கேரள மகளிர் ஆணையம் இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

Next Story