செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது


செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது
x
தினத்தந்தி 12 Feb 2019 8:55 AM GMT (Updated: 12 Feb 2019 9:54 AM GMT)

செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது என விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2012–ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரபேல் போர்விமானங்கள் வாங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடியாகும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2015–ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒரு ஒப்பந்தம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து, 2016–ம் ஆண்டு அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஒரு விமானத்தின் விலை ரூ.1,611 கோடி வருகிறது.

ஒப்பந்தத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டப்படி, 50 சதவீத உற்பத்தி இந்தியாவில்தான் இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு தகவலாக வெளியாகி வருகிறது. பெரும் ஊழல் என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில்  செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது என விமானப்படை அதிகாரி கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story