ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது- சிவசேனா


ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது- சிவசேனா
x
தினத்தந்தி 20 Feb 2019 8:24 AM GMT (Updated: 20 Feb 2019 8:24 AM GMT)

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மும்பை

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதிலும்கூட, கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிவசேனா கட்சி மத்திய அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும்  மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தது.

ஆனால், கடந்த இரு நாட்களுக்கு முன் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக, சிவசேனா கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து பிரமதர் மோடியை சிவசேனா கட்சி புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரும் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் இந்த கேள்விகள் எழுகின்றன, எங்கள் கூட்டணியால் எதிர்க்கட்சி 'பூச்சிகள்' நசுக்கப்படும்.  

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல்காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது, பிரியங்காவும் உதவியுள்ளார். ஆனால், இருவரையும், பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள், ராமர் கோயில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தரப்படுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மகாராஷ்டிராவின் நலனுக்காகவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், தேசிய ஜனநாயக் கூட்டணியில் சேர முடிந்ததே, கருத்து வேறுபாடுகளை மறந்து காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முடிந்ததே. ஆதலால், பாஜக தலைமையிலான கூட்டணியில் சிவசேனா எப்போதும் அங்கமாக இருக்கும். 

கடந்த 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்ப்பலை இருந்தது, அதேசமயம், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தலில், அலையின் அடிப்படையில் தேர்தலில் போட்டி இருக்காது. ஆனால், சித்தாந்தம், வளர்ச்சிப்பணிகள், எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும் இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

Next Story