விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த யூபிஎஸ் நிறுவனம் கள ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுதரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. “2014 தேர்தலில் மோடி அலை வீசியது, ஆனால் இப்போது அப்படி கிடையாது. மாநிலங்களில் அங்குள்ள தேவைகள் பிரதானமாக இருக்கும். பிரதமர் பதவிக்கு பொருத்தமான தலைவர் என்ற கேள்விக்கு மக்களுடைய கருத்து, தேர்தல் முடிவில் பா.ஜனதா வெற்றிப்பெறும் இடம் குறைவாக இருந்தாலும், மோடிக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது என தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மோடியை காட்டிலும் செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது. தேர்தலில் பா.ஜனதா வெற்றிப்பெறும் இடங்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்ததைவிட குறைந்து வருகிறது. தொடக்கத்தில் பா.ஜனதா 220 இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டது. பின்னர் அதுவே 200, 180 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு வருடம் ரூ. 6000 வழங்கப்படும் திட்டம் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று தெரிகிறது. உ.பி.யில் ஆதரவற்ற கால்நடைகள் பிரச்சினையை சந்திக்கிறது, இது அரசுக்கு சிக்கலை உருவாக்கலாம்.
இப்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம், கிராமப்புற பொருளாதாரம் பாதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அரசு நிறுவனங்களை அதிகாரமிழக்கச் செய்தல் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தால் அவர்களுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது. பா.ஜனதா தங்களுடைய நலத்திட்டங்களை பிரசாரத்தில் முன்வைத்தால் அவர்களுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story