தீவிரவாதத்தினை ஒழிக்கும் பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்; குலாம் நபி ஆசாத்


தீவிரவாதத்தினை ஒழிக்கும் பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்; குலாம் நபி ஆசாத்
x
தினத்தந்தி 26 Feb 2019 2:16 PM GMT (Updated: 26 Feb 2019 2:16 PM GMT)

தீவிரவாதத்தினை ஒழிக்கும் பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது.  பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்திய விமான படையின் இந்த தாக்குதலுக்கு தேசிய கட்சிகள் பல வரவேற்பு அளித்துள்ளன.  இந்திய படை வீரர்களை பாராட்டும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பேசியுள்ளனர்.  இதனை திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர்.

இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று விளக்கம் அளித்தார். இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.  இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் கூட்டம் முடிவுற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் வரும் தீவிரவாதத்தினை ஒழிப்பதற்கான பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளார்.

Next Story