அயோத்தி நில பிரச்சினை: உத்தரவு பிறப்பிப்பதை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது


அயோத்தி நில பிரச்சினை: உத்தரவு பிறப்பிப்பதை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது
x
தினத்தந்தி 6 March 2019 7:28 AM GMT (Updated: 6 March 2019 8:37 PM GMT)

ராமஜென்ம பூமி வழக்கில் தீர்வு காண மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பாபர் மசூதி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து சுமார் 14 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ‘மேலும் மசூதி என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்த ஒன்று அல்ல’ என 1994-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்குகளை 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் உரிய அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. அதன்படி இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர்களை கொண்டு தீர்வு காண கோர்ட்டு முயற்சிப்பதாகவும் இது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க மார்ச் 6-ந் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும் இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புக்களின் தரப்பில் இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகளில் ஒருவரான எஸ்.ஏ.போப்டே மத்தியஸ்தர்கள் மூலம் இதற்கு ஒரு தீர்வு கிடைப்பதாக இருந்தால் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிக்க உத்தரபிரதேச அரசு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியோர் தரப்பில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

ராம் லாலா விராஜ்மான் விக்கிரகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தன்னுடைய வாதத்தின் போது, “ராமர் பிறந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இடத்தின் மீது எங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதனை எங்களால் விட்டுத்தர முடியாது. மசூதியை வேறு ஏதாவது இடத்தில் கட்டிக் கொள்ள சம்மதிக்கும் பட்சத்தில் நாங்களே தொகையை திரட்டி வழங்கவும் தயார்” என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான அனைத்து வாதங்கள் முடிவடைந்தன. இது தொடர்பான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கை தொடர்ந்து இதே அரசியல் சாசன அமர்வு விசாரிக்குமா? அல்லது வேறு அமர்வு விசாரிக்குமா? என்பது குறித்தும் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்கள்.



Next Story