உத்தரபிரதேசத்தில் காஷ்மீர் வியாபாரிகள் மீது சரமாரி தாக்குதல்


உத்தரபிரதேசத்தில் காஷ்மீர் வியாபாரிகள் மீது சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 7 March 2019 12:05 PM IST (Updated: 7 March 2019 1:48 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில், காஷ்மீர் வியாபாரிகள் மீது வலதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு மத்தியில், நமது போராட்டம் காஷ்மீருக்காகவே எனவும் காஷ்மீரிகளுக்கு எதிராக இல்லை எனவும் பிரதமர் மோடி கூறினார்.  

இதன் பிறகு இச்சம்பவம் சற்று தணிந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் காஷ்மீரை சேர்ந்த உலர் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: -

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில், பரபரப்பான சாலையில் பழ விற்பனை செய்து வந்த 2 காஷ்மீரிகளை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் லக்னோவில் நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றுள்ளது. 2 காஷ்மீரிகளை தாக்கும் அந்த வலதுசாரி குழுவினர், அவர்கள் காஷ்மீரிகள் என்பதாலே தாக்குகிறோம் என்று கூறுகின்றனர். இவை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் காவி உடை அணிந்த 2 பேர், சாலையின் ஓரமாக அமர்ந்திருந்த 2 காஷ்மீரி பழ விற்பனையாளர்களை கட்டையால் கடுமையாக தாக்குகின்றனர். மற்றொரு வீடியோவில் அடி வாங்கும் நபர் தனது தலையில் கையை வைத்து தாக்குதல்காரர்களிடம் அடிப்பதை நிறுத்தமாறு கெஞ்சுகிறார். இன்னொரு வீடியோவில், காவி உடை அணிந்த அந்த நபர், 2-வது பழ வியாபாரியிடம் தனது அடையாள அட்டையை காட்டும்படி கூறுகிறார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து செல்கின்றனர்.

இதனிடையே உள்ளூர் நபர்கள் அந்த வலதுசாரிகள் தாக்குவதை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றனர். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள் எதுவாக இருந்தாலும் போலீஸை அழையுங்கள் என்று அவர்கள் வலதுசாரிகளுக்கு கூறினர். பல வருடங்களாக அந்த பகுதியில் உலர்ந்த பழங்களை காஷ்மீரைச்சேர்ந்த இருவரும் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீதும் வன்முறை ஏற்படுத்தியது மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் விரைவில் மற்றொருவரையும் கைதுசெய்வோம்  எனவும் போலீசார் கூறியுள்ளனர். 


Next Story