அயோத்தி விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது
அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சமரச குழு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி–பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. சமரச குழு பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியது.
இந்த குழு ஒரு வாரத்துக்குள் சமரச பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 8 வாரங்களுக்குள் அதை முடித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையை உத்தரபிரதேசத்தின் பைசாபாத்தில் நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு தங்கள் உத்தரவில் கூறியது.
நீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டது. இதற்காக பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அறையை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. பின்னர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்காக நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவினர் பைசாபாத் சென்றனர். பின்னர் இன்று அவர்கள் அவாத் பல்கலைக்கழகத்தில் சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதற்காக வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வக்கீல்களுடன் சமரச குழு முன் ஆஜராகினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story