நாட்டின் தலைமை எந்தவித தீவிரவாத செயல்களையும் எதிர்கொள்ள முழு திறமையுடன் உள்ளது; அஜித் தோவல்


நாட்டின் தலைமை எந்தவித தீவிரவாத செயல்களையும் எதிர்கொள்ள முழு திறமையுடன் உள்ளது; அஜித் தோவல்
x
தினத்தந்தி 19 March 2019 9:27 AM GMT (Updated: 19 March 2019 11:29 AM GMT)

நாட்டின் தலைமை எந்தவித தீவிரவாத செயல்களையும் எதிர்கொள்ள முழு திறமையுடன் உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.

குர்காவன்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் துணை ராணுவ படையினர் மீது நடந்த தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீசார் பலியாகினர்.  இதற்கு, இந்திய விமான படை பதிலடி கொடுத்தது.  பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியின் சிறப்பு ஆலோசகரான அஜித் தோவல், இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கு பின்புலத்தில் இருந்துள்ளார் என நம்பப்படுகிறது.

அரியானாவின் குர்காவன் நகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் 80வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, புல்வாமா போன்ற தீவிரவாத செயல்களுக்கு மற்றும் அதற்கு உதவியாக இருப்பவர்களுக்கு திறமையுடன் பதிலடி தருவதற்கு நாட்டின் தலைமை முழு தகுதியுடன் உள்ளது என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என கூறினார்.

நாம் என்ன செய்ய வேண்டும்? நமது வழி, நோக்கம் மற்றும் நமது பதிலடி மற்றும் அதற்கான நேரம் எதுவாக இருக்க வேண்டும்? ஆகியவற்றிற்கு நமது நாட்டின் தலைமை முழு தகுதி மற்றும் தைரியமுடன் உள்ளது.  அனைத்து வகையான சவால்களையும் நாடு எதிர்கொள்ளும்.  அதனை செய்வதற்கான தைரியம் நம்மிடம் உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை இந்தியா மறக்கவில்லை.  மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இதன்பின் 40 வீரர்களுக்கும் தோவல் மலரஞ்சலி செலுத்தினார்.  இந்த தாக்குதலை மிக வருத்தத்திற்குரிய விபத்து என கூறிய அவர், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நாடு எப்பொழுதும் கடன்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story