தேசிய செய்திகள்

ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் + "||" + Andhra parliamentary election: daughter to contested against father

ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்

ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்
ஆந்திர மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தலில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

விசாகப்பட்டினம், 

அரக்கு தொகுதியில் மத்திய மந்திரியாக இருந்த தந்தையை எதிர்த்து மகளே களத்தில் நிற்கிறார்.

மத்தியில் முந்தைய மன்மோகன் சிங் அரசில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கேபினட் மந்திரியாக இருந்தவர் கிஷோர் சந்திரதேவ் (வயது 72).

சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை எம்.பி. பதவி வகித்த இவர் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் ஐக்கியமானார்.

அவருக்கு அரக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வழங்கி உள்ளார்.

அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சி யோசித்தது. அதே கிஷோர் சந்திரதேவின் மகளும், சமூக சேவகியுமான சுருதிதேவியை வேட்பாளர் ஆக்கிவிட்டது.

ஆக தந்தை கிஷோர் சந்திரதேவை எதிர்த்து மகள் சுருதிதேவி போட்டியிட தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வியை எழுப்ப ஒரு வழி இல்லை.

ஏனென்றால் அங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கோடட்டி மாதவியை நிறுத்தி இருக்கிறது. எனவே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

இதேபோன்று விஜயநகரம் நாடாளுமன்ற தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அசோக் கஜபதி ராஜூ போட்டியிடுகிறார். விஜயநகரம் சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அவரது மகள் ஆதித்தி களத்தில் குதித்திருக்கிறார். இதுவும் மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.