ரூ.375 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனுவில் தகவல்


ரூ.375 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனுவில் தகவல்
x
தினத்தந்தி 23 March 2019 5:04 AM GMT (Updated: 23 March 2019 5:04 AM GMT)

ரூ.375 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கலின் போது தெரிவித்தார்.

அமராவதி,

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தனக்கு சொந்தமாக ரூ.375 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். புலிவேந்துலா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகன்மோகன் ரெட்டி  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதில், தன்னிடம் அசையும் சொத்துக்களாக ரூ.339 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாகவும் அசையா சொத்துக்களாக ரூ.35 கோடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு, இதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெகன் மோகன் ரெட்டி தன்னிடம் ரூ.343 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி ஒய்.எஸ்.பாரதி ரெட்டிக்கு சொந்தமாக ரூ.124 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு ரூ.71 கோடி மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளில் ரூ.54 கோடி ரூபாய் சொத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், ஜெகன்மோகன் ரெட்டியின் இரண்டு மகள்கள் பெயரிலும் சேர்த்து ரூ.11 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்கள் உள்ளன.

முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, தன்னிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அதேபோல், தான் வைத்திருக்கும் குண்டு துளைக்காத 4 வாகனங்களும், வேறு நபர்கள் பெயரில் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். 46 வயதான ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு எதிராக, 31 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story