தேசிய செய்திகள்

காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி + "||" + Sivagangai constituency Karthi Chidambaram Competition

காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தமிழகத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி விட்டது.

முக்கிய கட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தை தொடங்கி விட்டாலும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி நிலை நிலவி வந்தது.


இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதிலும் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இங்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமோ, அவரது மகன் கார்த்தி சிதம்பரமோ, கார்த்தி சிதம்பரத்தின் மனைவி டாக்டர் ஸ்ரீநிதியோ போட்டியிடக்கூடும் என தகவல்கள் உலா வந்தன.

அதே நேரத்தில் அந்த தொகுதியை பிடிக்க முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பனும் கோதாவில் இறங்கினார். ஆனாலும் வேட்பாளர் தேர்வில் கார்த்தி சிதம்பரத்துக்கு யோகம் அடித்திருக்கிறது. அவரே வேட்பாளர் என கட்சி மேலிடம் நேற்று அறிவித்தது. இந்த வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதியுடன், மராட்டிய மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கும், கர்நாடகம், காஷ்மீர் மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர் எச்.ராஜா நிற்கிறார். அவரை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்.

சிவகங்கை தொகுதியை பொறுத்தமட்டில் 1984, 1989, 1991, 1996, 1998 என தொடர்ந்து 5 நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

1999-ம் ஆண்டு தேர்தலில் சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அடுத்து 2004, 2009 தேர்தல்களில் மீண்டும் ப.சிதம்பரம் வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த 2014 தேர்தலில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு, அ.தி.மு.க.வின் செந்தில்நாதனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் அப்போதும் எச்.ராஜாவும் களத்தில் இருந்தார்.

இந்த முறை கார்த்தி சிதம்பரம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிற பாரதீய ஜனதாவின் எச்.ராஜாவுடன் நேரடியாக மோதுகிறார். போட்டி பலமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் நாளை காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.