காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள் நிறைந்தது: பிரதமர் மோடி


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள் நிறைந்தது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 April 2019 6:15 AM GMT (Updated: 3 April 2019 6:15 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள், பாசாங்குதனம் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

பசிகாட், 

அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு சைங் மாவட்டத்தில் உள்ள பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:- வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. 

வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் வடகிழக்கு மாநிலங்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நாடு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை எனக்கூறி காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது. கிழக்கு ஆசியாவின் ஒட்டுமொத்த வாயிலாக அருணாச்சல பிரதேசத்தை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். புதிய அருணாச்சல பிரதேசத்தில்,  எங்களின் தொலைநோக்கு பார்வை என்னவெனில், இணைப்பு, வளம், மதிப்பு ஆகியவையே ஆகும்.

விவசாயிகளின் பெயரில் நாங்கள் ஒரு போதும் வாக்கு கேட்கவில்லை. இருந்த போதிலும் நாங்கள் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். இந்த தேர்தல் கண்ணியத்துக்கும், ஊழலுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் ஆகும். அருணாச்சல பிரதேசத்தின் மக்களின் ஆதரவுடன், சாலை வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் கொண்டு வந்தோம். 

அருணாச்சல பிரதேசத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி அடைய செய்யவும், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதை நீங்கள் உறுதி செய்யவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்களையும் பாசாங்குதனத்தையும் உள்ளடக்கியது.  காங்கிரஸ் கட்சியினர் டெபாசிட் இழக்கச்செய்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story