அரசியல் சாசனத்தை சீர்குலைக்க முயற்சி பா.ஜனதா மீது பிரியங்கா குற்றச்சாட்டு


அரசியல் சாசனத்தை சீர்குலைக்க முயற்சி பா.ஜனதா மீது பிரியங்கா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2019 4:45 AM IST (Updated: 15 April 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சாசனத்தை சீர்குலைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

கவுகாத்தி,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அசாம் மாநிலம், சில்சாரில் காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் எம்.பி.க்கு ஆதரவு திரட்டும் வகையில், நேற்று ஊர்வலமாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சாடினார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த நாள், அம்பேத்கரின் பிறந்த நாள். அரசியல் சாசனத்தின் மூலமாக அவர் இந்த நாட்டுக்கு அஸ்திவாரம் அமைத்து கொடுத்தார். ஆனால் அந்த அரசியல் சாசனத்தை மதிக்காத தன்மையையும், அதை சீர்குலைக்க முயற்சி நடப்பதையும் நீங்கள் பார்க்க முடியும்” எனவும் குறிப்பிட்டார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையையும் பிரியங்கா தாக்கிப்பேசினார். “பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாறுபட்ட கலாசாரங்களுக்கு, மதங்களுக்கு அதில் இடம் இல்லை. அரசியல் சாசனத்துக்கும் மதிப்பு இல்லை” என அவர் கூறினார்.

மேலும், “கடந்த 5 ஆண்டுகளில் வாரணாசியில் யாருடனும் பிரதமர் மோடி 5 நிமிடம்கூட செலவிடவில்லை என்று அங்குள்ள மக்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர் அமெரிக்கா போகிறார். கட்டித்தழுவுகிறார். சீனா செல்கிறார். கட்டித்தழுவுகிறார். ரஷியா, ஆப்பிரிக்கா என போகிறார். கட்டித்தழுவுகிறார். ஜப்பானுக்கு போகிறார். முரசு கொட்டுகிறார். ஆனால் சொந்த தொகுதியில் ஒரு வீட்டுக்கு சென்று அவர்களின் நிலையை விசாரித்து அறிந்தது இல்லை” என்றும் பிரியங்கா விமர்சித்தார்.

தனது பாட்டி இந்திரா காந்தியையும் பிரியங்கா நினைவுகூர்ந்தார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “இன்றைக்கும் நீங்கள் இந்திரா காந்தியை நினைக்கிறீர்கள். ஏனென்றால் அவர் உங்களுக்காக உழைத்திருக்கிறார். இங்கே போட்டியிடுகிற சுஷ்மிதாவுக்காக நான் வந்திருக்கிறேன். இந்திரா காந்தியிடம் இருந்த தைரியம், இவரிடமும் இருக்கிறது” என குறிப்பிட்டார்.

Next Story