5வது மக்களவை தேர்தல் (1971); இழந்த தொகுதிகளை கைப்பற்றிய இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி


5வது மக்களவை தேர்தல் (1971); இழந்த தொகுதிகளை கைப்பற்றிய இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி
x
தினத்தந்தி 16 April 2019 11:58 AM GMT (Updated: 16 April 2019 11:58 AM GMT)

நாட்டில் நடந்த 5வது மக்களவை தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி முந்தைய தேர்தலில் இழந்த பல தொகுதிகளை கைப்பற்றியது.

இந்தியாவில் 5வது மக்களவை தேர்தல் கடந்த 1971ம் ஆண்டு மார்ச்சில் நடந்தது.  இந்த தேர்தல் பிரசாரத்தில் வறுமை ஒழிப்பு பற்றி அதிகம் பேசப்பட்டது.  இதனால் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) அமோக வெற்றி பெற்றது.  முந்தைய தேர்தலில் இழந்த பல தொகுதிகளை இந்த தேர்தலில் கைப்பற்றியது.

இதற்கு முந்தைய அரசில் இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.  இதனால் கடந்த 1969ம் ஆண்டு கட்சியில் இருந்து இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார்.  இதனை தொடர்ந்து கட்சி உடைந்தது.

காங்கிரஸ் கட்சியின் பெருமளவிலான எம்.பி.க்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் இந்திரா காந்தியின் இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) அணியில் இணைந்தனர்.  இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இந்திரா காந்திக்கு எதிராக 31 எம்.பி.க்கள் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸ் (ஓ) என்ற அணியை உருவாக்கினர்.  கட்சி உடைந்த நிலையிலும் வலுவான பெரும்பான்மையை இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி பெற்றது.

மொத்தமுள்ள 518 தொகுதிகளில் அந்த அணி 352 தொகுதிகளை (43.68 % வாக்குகள்) கைப்பற்றியது.  இந்திய தேசிய காங்கிரஸ் (ஓ) அணி 16 தொகுதிகளையே (10.43 % வாக்குகள்) கைப்பற்ற முடிந்தது.

இந்த தேர்தலுக்கு பின் கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 12ந்தேதி இந்திரா காந்தி போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளன என கூறி அவரது வெற்றி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் பதவி விலகுவதற்கு பதிலாக அவர் அவசரகால நிலையை அமல்படுத்தினார்.  இதன்பின் கடந்த 1977ம் ஆண்டு ஜனநாயகம் திரும்பியது.  எதிர்க்கட்சியான மற்றொரு காங்கிரஸ் அணி ஜனதா கட்சி என்ற பெயரில் கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கட்சியை உருவாக்கியது.  இதனால் 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி முதன்முறையாக தோல்வியை சந்தித்தது.

Next Story