தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு என்ன?


தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு என்ன?
x
தினத்தந்தி 20 April 2019 11:25 PM GMT (Updated: 20 April 2019 11:25 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு என்ன என்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதான சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் 22 நீதிபதிகளுக்கு பிரமாண வாக்குமூலமாக ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் தன்னிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எப்படி பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டார் என விவரித்து இருக்கிறார்.

அதில் அந்தப் பெண், “அவர் (தலைமை நீதிபதி) இடுப்பை சுற்றி என்னை அணைத்து கொண்டார். தன் கைகளால் என் உடல் முழுவதையும் தொட்டார். என் மீது அவரது உடலை வைத்து அழுத்தினார். நான் உறைந்து போய் நின்று விட்ட நிலையில், என்னை கெட்டியாகப் பிடித்துக்கொள் என்று அவர் கூறினார். அவரது தழுவலில் இருந்து நான் விடுவித்துக்கொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னை அவர் விடவில்லை” என குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 மற்றும் 11-ந் தேதிகளில்தான் தன்னிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

தலைமை நீதிபதியின் அத்துமீறல்களை தான் ஏற்க மறுத்து, நிராகரித்த பின்னர், அவரது வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தலைமை நீதிபதியின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து பணியாற்றத்தான் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்து உள்ளார். சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆன பின்னர் அந்தப் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்.

ஒரு நாள் தான் முன் அனுமதியின்றி விடுமுறை எடுத்ததை பணி நீக்கத்துக்கான ஒரு காரணமாக குற்றம்சாட்டி பணி நீக்கம் செய்துள்ளதாக அவர் விவரித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் பாலியல் அத்துமீறலை தான் ஏற்காத காரணத்தால், தான் மட்டுமல்லாது, தனது ஓட்டு மொத்த குடும்பமும் பாதிப்புக்குள்ளானது என அவர் விவரித்துள்ளார்.

மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் மனைவி, தன்னை வீட்டுக்கு வரவழைத்து, தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாகவும் புகார் கூறி உள்ளார்.


Next Story