என்.டி.திவாரி மகனை மனைவியே கொலை செய்ததின் பின்னணி என்ன? மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன


என்.டி.திவாரி மகனை மனைவியே கொலை செய்ததின் பின்னணி என்ன? மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 9:23 PM GMT)

டெல்லியில் மே 12-ந் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், மற்றொரு பரபரப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

என்.டி. திவாரி மகன் படுகொலை

அது, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களில் முதல்-மந்திரி பதவி வகித்த ஒரே தலைவர் என்ற பெருமைக்குரிய என்.டி. திவாரியின் மகன், 40 வயதான ரோகித் சேகரின் படுகொலைதான்.

படு சுறுசுறுப்பு டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

இந்த படுகொலையை அரங்கேற்றியவர், சாட்சாத் ரோகித் சேகரின் மனைவி அபூர்வா என்பதை மின்னல் வேகத்தில் கண்டு பிடித்து இருக்கிறது.

துப்பு துலக்கியது போலீஸ்

அதிலும் குறிப்பிடத்தகுந்த அம்சம், ரோகித் சேகர் கழுத்து நெரிக்கப்பட்டும், மூச்சு திணறடிக்கப்பட்டும்தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்த அதே நாளில், போலீசின் கழுகுப்பார்வை அபூர்வாவின் மீதுதான் விழுந்தது.

ஆனாலும் இந்த கொலையை அபூர்வா எதற்காக செய்தார் என்பது மட்டும்தான் புரியாத புதிராக அவர்களுக்கு அமைந்தது. விடவில்லை. துப்பு துலக்கி விட்டார்கள்.

அம்மாவின் ஆசை

அபூர்வா, எப்படி திருமதி ரோகித் சேகர் ஆனார் என்பதே ஒரு சுவாரசியமான கதைதான்.

என்.டி.திவாரி, உஜ்வாலா என்ற பெண்ணுடன் வைத்திருந்த சட்டப்பூர்வமற்ற உறவால் வந்து பிறந்தவர்தான் இந்த ரோகித். ஆனால் அவரை தனது மகன் என அவர் ஏற்கவில்லை. ரோகித் விடாமல் 6 ஆண்டு காலம் சட்ட போராட்டம் நடத்தினார். என்.டி.திவாரியின் கழுத்தைப் பிடித்தது கோர்ட்டு,

மரபணு பரிசோதனைக்கு அவர் சம்மதித்தே தீர வேண்டும் என்ற நிலை வந்தபோதுதான் மனிதர் இறங்கி வந்தார். “நீ என் மகன்தான் ரோகித்” என்று ஒப்புக்கொண்டார்.

அப்படி தனது தந்தை யார் என்று வெளியுலகுக்கு நிரூபித்துக் காட்டிய மகனுக்கு திருமணம் முடித்து வைக்க ஆசைப்பட்டார், அம்மா உஜ்வாலா.

ஆன்-லைனில் பிடித்த மணப்பெண்

இப்போதுதான் ஆன்-லைன் இருக்கிறதே, தேடிப்பார்ப்போம் என ரோகித் களம் புகுந்தார். திருமண இணையதளம் ஒன்றில் அபூர்வாவை அவர் கண்டுபிடித்தார். அபூர்வாவின் அழகில் ‘கிளின்போல்டு’ ஆனார். அவர் சட்டம் படித்த வக்கீல் என்பது கூடுதல் பிளஸ்.

அம்மா உஜ்வாலாவிடம், “அம்மா.. இதோ உங்கள் வருங்கால மருமகள்” என அபூர்வாவின் சுய விவர குறிப்புகள், புகைப்படத்தை நீட்டினார். அதைத் தொடர்ந்து அபூர்வாவை நேரில் சந்திக்க முடிவு செய்தார்.

முதல் சந்திப்பிலேயே நெருக்கம்

ஒரு மழை நாளில் இருவரும் உத்தரபிரதேச மாநிலம், லக்னோ நகரில் சந்தித்தனர். இருவரும் மனதளவில் ஒரே அலை வரிசையில் இருப்பதாக உணர்ந்தனர். முதல் நாளிலே நெருக்கம் உண்டானது. இருவரும் ஒன்றாகவே வாழத்தொடங்கினர்.

நவீன உலகம் அல்லவா? திருமணம் முடிக்காமலேயே ஓராண்டு காலம் இணைந்து வாழ்ந்தனர்.

திருமணம்

ஒரு வழியாக கடந்த ஆண்டு மே மாதம் 12-ந் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டலில் சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொண்டனர். டெல்லி அரசியல்வாதிகள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை அத்தனை பேரும் ஆஜராகி, ரோகித்-அபூர்வா ஜோடி மீது வாழ்த்துக்களை மழையாய் பொழிந்தனர்.

மகனின் திருமண விழா காட்சிகள், தாய் உஜ்வாலாவுக்கு கண் கொள்ளாக்காட்சிகள் ஆயின.

தேனிலவு கசந்தது

அதைத் தொடர்ந்து டெல்லியில் உயர் வர்க்கத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்கிற டிபன்ஸ் காலனியில் அமைந்துள்ள ரோகித் சேகரின் வீட்டுக்கு விளக்கேற்ற போனார் அபூர்வா.

யார் தான் எதிர்பார்ப்பார்கள், இப்படி ஒரு அழகான, அம்சமான, உயர் வர்க்கத்து ஜோடியின் சந்தோஷம் நீடிக்காது என்று.

ரோகித்துக்கும், அபூர்வாவுக்கும் தேனிலவே குருஷேத்திரக்களமாக மாறிப்போனது.

கணவனின் காதலி

வேறொன்றும் இல்லை. ரோகித்துக்கு உறவிலும் ஒரு காதலி உண்டு என்று அபூர்வாவுக்கு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல, அந்தப் பெண்ணைத் தேடி அவளது வீட்டுக்கு ரோகித் அடிக்கடி செல்வார் என்பது வரை ‘ஏ டூ இசட்’ அத்தனை விவரமும் தெரிய வர கொதித்துப்போனார் அபூர்வா.

அதைத் தொடர்ந்து ரோகித்துக்கும், அபூர்வாவுக்கும் இடையே ஊடல்கள் ஒரு தொடர்கதையானது. கூடல் இல்லாமல் போனது.

தாய் வீட்டுக்கு போன அபூர்வா

நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று அபூர்வா கேட்டது தொடங்கி என்ன கேட்டாலும், ரோகித் கண்டுகொள்ளவில்லை. இதனால் நித்தமும் சண்டைதான். ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்து விடலாம் என்றே இருவரும் முடிவுக்கு வந்தனர். வரும் ஜூன் மாதத்தில் இதை செய்து விடலாம் என எண்ணி இருக்கிறார்கள்.

இதற்கிடையே இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை ஏற்பட, அபூர்வா கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு போய் விட்டார். மார்ச் 3 முதல் மார்ச் 29 வரை தாய் வீட்டு வாசம். மார்ச் 30-ந் தேதி சமரசத்துக்கு பின்னர் அபூர்வா, புகுந்த வீட்டுக்கு போனார்.

மதுவால் மாட்டிக்கொண்டார்...

வந்தது நாடாளுமன்ற தேர்தல். 11-ந் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவில் ஓட்டுப்பதிவு செய்வதற்காக ரோகித், தாய் உஜ்வாலாவுடன் உத்தரகாண்ட் சென்றார். அவர்களுடன் சென்றார், ரோகித்தின் காதலி.

கணவனுடன் காதலி செல்வது அபூர்வாவுக்கு தெரியாது. அபூர்வா டெல்லியில் இருந்து விட்டார்.

இந்த நிலையில் சாதாரண முறையில் உத்தரகாண்ட் சென்ற கணவன் ரோகித்தை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் அழைத்தார் அபூர்வா. அந்த நேரம் பார்த்து ரோகித்தும், காதலியும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்திக்கொண்டிருக்க, அந்த போதையிலேயே, அழைப்பது யார் என்று தெரியாமல் செல்போனில் அபூர்வாவிடம் பேசினார்.

ரோகித்துடன், காதலி இருப்பதை அபூர்வா பார்க்க ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் உறைந்து போனார்.

டெல்லி திரும்பினர்

4 நாட்களுக்கு பின்னர் 15-ந் தேதி ரோகித் டெல்லி திரும்பினார். இரவு நேரத்தில் அவரது டிபன்ஸ் காலனி வீட்டில் ரோகித்தின் அண்ணன் சித்தார்த், வேலைக்காரர்கள் மார்த்தா, கொலு, டிரைவர் அகிலேஷ் இருந்திருக்கிறார்கள்.

இரவு 10 மணி... திலக் நகரில் உள்ள அரசு வீட்டில் இருந்த உஜ்வாலா, இரவு சாப்பாட்டுக்காக டிபன்ஸ் காலனி வீட்டுக்கு வந்தார். ரோகித் எங்கே என அவர் கேட்க, அவர் படுக்கை அறையில் தூங்கி விட்டார் என மருமகளிடம் இருந்து பதில் வந்தது.

ஆனால் ஓரிரு நிமிடங்களில் அங்கே ரோகித் வந்தார். அம்மாவுடன் இரவு உணவு சாப்பிட்டார். அதன்பின்னர் ரோகித், தாயை காரில் திலக்லேன் வீட்டில் அழைத்து சென்று விட்டு வந்தார்.

‘தூங்கியவர் எழவில்லை’

அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு உஜ்வாலா, டிபன்ஸ் காலனி வீட்டுக்கு வந்தார். ரோகித் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார், எழவில்லை என்று அபூர்வா, மாமியாரிடம் சொன்னார்.

அதையடுத்து ரோகித் டிரைவர் அகிலேஷ்ஷிடம் காரை எடுக்க சொல்லி, சாக்கெட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு ஓட்டுமாறு கூறினார். அங்கு அவர் ஒரு டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெற சென்றார்.

அங்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு மருமகள் அபூர்வாவிடம் இருந்து செல்போன் அழைப்பு. அதில் காத்திருந்தது வெடிகுண்டு. ஆமாம். ரோகித் உடல்நிலை திடீரென கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னார் அபூர்வா. உடனே அங்கிருந்து ஆம்புலன்சில் உஜ்வாலா மகனை அழைத்துவர டிபன்ஸ் காலனி வீட்டுக்கு விரைந்தார்.

இறந்தார் ரோகித்

அங்கே அவர் கண்ட காட்சி. மருமகள் அபூர்வா, அசைவற்ற நிலையில் இருந்த ரோகித்தை காரில் திணித்துக் கொண்டிருப்பதை கண்டார். உடனே ரோகித்தை அவர் ஆம்புலன்சில் ஏற்ற வைத்து, மேக்ஸ் மருத்துவமனைக்கு திரும்பினார். அங்கே ரோகித்தை பரிசோதித்த டாக்டர்கள் சொன்னார்கள். “ரோகித் ஏற்கனவே இறந்து விட்டார்” என்று.

அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக சொல்லப்பட்டது. இது குடும்பத்துக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.

பிரேத பரிசோதனையில் ‘திடுக்’

பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ரோகித் மரணம் இயற்கையாக நிகழவில்லை, கழுத்து நெரிக்கப்பட்டும், மூச்சு திணறடிக்கப்பட்டும் அவர் இறந்திருக்கிறார், அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என்று பிரேத பரிசோதனை அறிக்கை செய்தி சொன்னது.

டெல்லி போலீஸ் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தது. டிபன்ஸ் காலனி வீட்டுக்கு விரைந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தடயங்களை சேகரித்தது. விசாரணை நடத்தியது. அபூர்வா, வீட்டு வேலைக்காரர்கள் என அத்தனைபேரையும் விசாரணைக்கு அழைத்தது.

நடந்தது என்ன?

விசாரணையில், ரோகித் இறப்பதற்கு முன்னால் அவருக்கும், அபூர்வாவுக்கும் இடையே சண்டை நடந்தது தெரிய வந்தது. இந்த சண்டை, உஜ்வாலா டிபன்ஸ் காலனி வீட்டுக்கு வந்து ரோகித்துடன் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு சென்றதில் இருந்து வந்ததின் நீட்சி.

சண்டைக்கு பின்னர் ரோகித் மது அருந்தி உள்ளார்.

ஆனால் இந்த சண்டையை அபூர்வா, போலீசிடம் மறைத்து விட்டார். ரோகித் அவரது அறையில் இருந்தார், நான் பேசவே இல்லை என்று சொல்லி விட்டார். இது போலீசுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.

மரபணு பரிசோதனை

அதைத் தொடர்ந்து அபூர்வாவிடம் நகம், தலை முடிகளை போலீசார் சேகரித்து, மரபணு பரிசோதனைக்கு அனுப்பினர். அதை ரோகித் உடலில் இருந்த நகக்குறி, முடிகளுடன் ஒப்பிட்டு தடய அறிவியல் வல்லுனர்கள் சோதித்தபோது, எல்லாமே ‘மேட்ச்’ ஆனது. ரோகித்தை கொலை செய்தது மனைவி அபூர்வா என்பது உறுதியானது.

பொறியில் சிக்கிய எலி ஆனார் அபூர்வா.

ஒப்புக்கொண்டார் அபூர்வா

ஒரு வழியாய் கடைசியில் நடந்தது என்ன என்பதை அபூர்வா ஒப்புக்கொண்டார்.

“ரோகித் குடித்து விட்டு மதுபோதையில் என்னை அடித்தார். நான் அவரை தள்ளினேன். கழுத்தை நெரித்தேன். அவர் உயிர் பிரிந்து விட்டது” என்றார் கண்ணீர் வழிய.

இப்போது டெல்லி சிறையில் அபூர்வா. கணவர் ரோகித்தை கொன்ற அவர், சாமானிய பெண் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு வக்கீல். அப்படி வக்கீலாக இருந்து கொண்டே, இப்படி செய்தால் சட்டம் நம்மை சும்மா விட்டு விடுமா என அவர் நினைக்காமல் போனதுதான் விசித்திரம். குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் அபூர்வா.

Next Story