எனது அரசு புரட்சி நிறைந்த அரசாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்; ஜெகன் மோகன் ரெட்டி


எனது அரசு புரட்சி நிறைந்த அரசாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்; ஜெகன் மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 26 May 2019 10:52 AM GMT (Updated: 26 May 2019 10:52 AM GMT)

எனது அரசு புரட்சி நிறைந்த அரசாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இதையடுத்து, 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக எனக்கு எதுவும் கிடையாது.  எனது பணி மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பதே.  இன்று உங்களுக்கு உறுதியளிக்க போகிறேன்.  எனது அரசு புரட்சி நிறைந்த அரசாக இருக்கும்.

இன்னும் 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் நாட்டின் முன்மாதிரியாக இந்த அரசு இருக்கும் என்பதனை நான் உறுதி செய்வேன் என கூறினார்.

பிரதமருடன் இன்று நடந்தது முதல் சந்திப்பு.  இன்னும் 5 வருடங்களில் 30, 40, 50 முறையாவது அவரை கடவுள் ஆசியால் சந்திக்க நேரிடும்.  ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்பொழுதும், ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு பிரிவு அந்தஸ்து வழங்குவது பற்றி நினைவூட்டி கொண்டே இருப்பேன்.  தொடர்ந்து நாம் நினைவுப்படுத்துவது மாற்றத்தினை ஏற்படுத்தும் என கூறினார்.

ரூ.2.58 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ள ஆந்திராவுக்கு நிதி உதவி வழங்கும்படி பிரதமர் மோடியிடம் கோரியுள்ளேன்.  பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்தினை நிறைவு செய்வேன்.  இதில் ஏதேனும் ஊழல் இருப்பின் அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.  அமராவதி புதிய தலைநகரம் அமைப்பதில் மற்றும் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்த திட்டங்களில் ஊழல் இருப்பது கண்டறியப்பட்டால் அதுபற்றியும் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Next Story